கிறிஸ்தவனுக்கு தீர்மானிப்பதில் சந்தேகமான காரியங்கள்

கிறிஸ்தவனுக்கு

தீர்மானிப்பதில்

சந்தேகமான

காரியங்கள்

டாக்டர் கேட்டிஸ் ஹட்சன்

சரியா அல்லது பிழையா என ஒரு

சந்தேகமான காரியம் இருக்குமானால்

தீர்மானிப்பதில் கிறிஸ்தவர்களுக்கு உதவ

பதினொரு வழிகாட்டல்கள்

கிறிஸ்தவனுக்கு தீர்மானிப்பதில்

சந்தேகமான காரியங்கள்

"ஒருவன் எந்தப் பதாத்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான். புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக. தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே” - ரோமர் 14:2,3.

"அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்” - ரோமர் 14:5.

குறிப்பிட்ட ஒரு காரியம் சரியா அல்லது பிழையா என அறிய வேண்டுமென்றிருக்கின்ற உண்மையான கபடற்ற கிறிஸ்தவனிடமிருந்து ஒரு கடிதத்தினை இவ் வாரம் பெற்றேன். அவர் தனது கடிதத்தில், இந்த காரியத்தையிட்டு வேதாகமத்தில் தேடியும் ஒரு தெளிவான வேதவாக்கு கிடைக்கவில்லை எனவும்; அத்துடன், "நானும் எனது குடும்பத்தினரும் சரியானதைச் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம், நான் தர்மசங்கடமான நிலையில் நேர்மையாக இருக்கிறேன், அல்லது நான் உதவிக்காக எழுதிக் கேட்டிருக்க மாட்டேன்” எனவும் எழுதியிருந்தார்.

இந்த அருமைக் கிறிஸ்தவன் முற்றிலும் சரியாக இருந்தார்- அவருடைய கேள்விக்கு ஒரு தெளிவான பதிலைக் கொடுக்கும் வசனம் வேதாகமத்தில் இல்லை. ஆனால் வேதாகமத்தைப் பற்றி இரண்டு காரியங்களை ஒருவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

முதலாவது, இது எல்லாக் காலங்களிலுமுள்ள எல்லா மக்களுக்கும் எழுதப்பட்டது; ஆகையால் எல்லாக் காரியமும் தெளிவாக உச்சரிக்கப்பட்டிருக்க முடியவில்லை. உதாரணத்திற்கு, "ஒட்டகங்களை புகையாதிருப்பாயாக (ஒட்டக சிகரட்டுக்களை)” என வேதாகமத்தில் ஒரு வசனம் இருந்திருக்குமானால், அந்தப் பகுதியை விளங்கப்படுத்துவதற்கு பழைய போதகர்களுக்குக் கடினமாக இருந்திருக்கும்; இது சந்தேகமானதும், உண்மையில் இதன் கருத்து என்னதென்று விளங்கிக் கொள்ள முடியாததாயும் அவர்களுக்கு இருந்திருக்கும். சிலர் தாங்கள் ஒருபோதும் தங்கள் ஒட்டகங்களுக்கு அண்மையில் நெருப்பு மூட்டாதபடிக்கும், புகை அதன் திசையில் செல்லாதபடிக்கும் இருக்க வேண்டும் என நிச்சயப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

மற்றும் பழைய ஏற்பாட்டிலே, "தொலைக்காட்சி பாராதிருப்பாயாக” என்று ஒரு வசனம் இருந்திருக்குமேயானால், தொலைக்காட்சி என்றால் என்ன என்று மணித்தியாலக் கணக்கில் அந்த போதகர்கள் விவாதத்தை நடத்தியிருப்பார்கள். இது சந்தேகமானதும் அவர்களால் ஒருபோதும் ஒரு ஒப்பந்தத்திற்குள் வரமுடியாததாயும் இருந்திருக்கும். ஆகவே வேதாகமமானது, எல்லாக் காலங்களிலுமுள்ள, எல்லா மனிதர்களுக்காகவும் எழுதப்பட்டபடியால், அதிகமான காரியங்கள் தெளிவாக உச்சரிக்கப்படவில்லை.

இரண்டாவது, வேதாகமம் ஒரு சுருக்கமான புத்தகமாகும். நான் என்னத்தைக் கருதுகிறேன் என்பதை விளங்கப்படுத்துகிறேன்.

வேதவாக்கு யோவான் 21:25 இல் கூறுவது, "இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்”. ஆகவே இயேசு செய்த எல்லாவற்றையும் புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தால், அவை எல்லாவற்றையும் வாசிப்பதற்கு ஒருவருக்கும் நேரம் இருந்திருக்காது. மனிதர்கள் எதை அறிந்து கொள்ள வேண்டுமென தேவன் விரும்பினாரோ, அதை வேதாகம எழுத்தாளர்களுக்கு வெளிப்படுத்தத் தெரிந்து கொண்டார். வேதாகமமானது கடவுளுக்குத் தெரிந்தவைகளின் வெளிப்பாடு அல்ல, மாறாக மனிதர்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென கடவுள் விரும்பினாரோ, அவற்றின் வெளிப்பாடேயாகும். இது கடவுளுக்குத் தெரிந்தவைகளின் வெளிப்பாடாக இருக்குமேயானால், மீண்டும் அப்புத்தகங்களை உலகம் கொள்ளாது, ஏனெனில், கடவுளுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை. கடவுள் எல்லாம் அறிகிறவராக இருக்கிறார்.

"கடவுளுக்கு ஒருபோதும் நேரிடாததொன்று உங்களுக்கு எப்போதாவது நேரிட்டதா?” என்று ஒருவர் கேட்டார்.

விசுவாசிகள் எப்போதும் முகங்கொடுக்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் வேதாகமம் விளக்கமான விடை கொடுக்காதபோதில், வேதவார்த்தையில் உச்சரிக்கப்படாத காரியங்களைக் குறித்து அவர்கள் என்ன செய்யலாம்? மனச்சாட்சியைத் தங்களுக்கு வழிகாட்டியாக வைத்துக்கொள்ளும்படி கிறிஸ்தவர்களுக்கு அடிக்கடி ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. "உனது மனச்சாட்சியைப் பின்பற்று” என பிரசங்கிமார்கள் கூறியதை நான் கேட்டிருக்கின்றேன். ஆனால் இது ஒரு நல்ல ஆலோசனையல்ல. ஒருவரின் மனச்சாட்சி அவர் விசுவாசிப்பதினால் திட்டமிடப்பட்டிருக்கும்; அவர் சரியானதை விசுவாசிக்கவில்லையாயின், அவரின் மனச்சாட்சி அவரைத் தவறாக வழிநடத்தும்.

உதாரணத்திற்கு, ஒரு கத்தோலிக்க நண்பன் பூசைக்குப் போகாவிட்டால், அவனின் மனச்சாட்சி அவனைத் துன்பப்படுத்தும், ஏனென்றால் அவர் கட்டாயம் போக வேண்டுமென விசுவாசிப்பவர்; ஆனால் பூசைக்குப் போகாததற்காக எனது மனச்சாட்சி என்னைத் துன்பப்படுத்தாது, அதற்காக நான் போனதுமில்லை. நான் கட்டாயம் போகத்தான் வேண்டுமென விசுவாசிப்பதில்லை என்பதே வித்தியாசம்.

ஆகவே, நீர் உமது மனச்சாட்சியைப் பின்பற்றவோ அல்லது உமது மனச்சாட்சியை உமது வழிகாட்டியாக இருக்க விடவோ முடியாது. "உனது மனச்சாட்சியைப் பின்பற்று” என வேதாகமம் ஒருபோதும் கூறுவதி்ல்லை.

விசுவாசிகள் எப்போதும் முகங்கொடுக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் வேதாகமம் தெளிவான, விளக்கமான அறிவுறுத்தலைக் கொடுக்கவில்லை, ஒருவன் தனது மனச்சாட்சியையும் பின்பற்ற முடியாது, அப்போது கிறிஸ்தவர்கள் இந்த சந்தேகமான காரியங்களைப் பற்றி என்ன செய்யலாம்?

இப்போது, வேதாகமமானது எல்லாவற்றையும் குறிப்பிட்டு விளக்கமாக கிறிஸ்தவர்கள் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதைக் கொடுக்காத போதிலும், ஒரு நேர்மையான கிறிஸ்தவன் சந்தேகமான காரியங்களில், சரியான தீர்மானத்தை எடுக்க வழிகாட்டல்களைக் கொடுக்கிறது. ஒரு காரியம் சரியா அல்லது பிழையா எனத் தீர்மானிப்பதி்ல் விசுவாசிக்கு உதவக்கூடிய பதினொரு வழிகாட்டல்களை இச்செய்தியில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. கடவுளின் சித்தத்தை அறிந்ததும்,

சரியானதைச் செய்ய விரும்புகின்றீரா?

நாம் சேவகர்கள், கடவுள் தான் எஜமான். எஜமானுக்கு என்னது தேவையென்பதை ஊகிப்பது சேவகனின் கடமையல்ல; எஜமான் தனது சித்தத்தைத் தெளிவாகக் காட்டியவுடன் அதற்குக் கீழ்ப்படிவதே அவனின் கடமையாகும். ஒரு குறிப்பிட்ட காரியம் சரியா அல்லது பிழையா என விசுவாசிக்குத் தெரியாத போதிலும், அது அவனுடைய விருப்புக்கு விரோதமாகப் போனாலும்கூட அவன் கடவுளின் சித்தம் இன்னதென்பதை தெளிவாகவும் உறுதியாகவும் தீர்மானிக்க வேண்டும். "அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்” என யோவான் 7:17 வாக்களிக்கிறது. கர்த்தாவே, இது சரியா அல்லது பிழையா என்பதை என்னை அறியவிடும், நான் சரியானதைச் செய்வதினால், நான் தீர்மானிப்பேன் எனும் மனோபாவத்துடன் ஒருவன் கடவுளை அணுகக்கூடாது. அவனுடைய மனோபாவமானது, கர்த்தாவே, இது சரியா அல்லது பிழையா என்பது எனக்குத் தெரியாது; ஆனால் நிச்சயமாக அறிந்துகொள்ள நீர் அனுமதிப்பீரானால், எனது அதிக விருப்பு என்ன என்பதையும், மற்றவர்கள் என்ன கூறுகின்றனர் என்பதையும் பொருட்படுத்தாமல், சரியானதைச் செய்வேன் என்பதாக இருக்க வேண்டும்.

கடவுளின் ஒவ்வொரு நன்மையும் தனது வாழ்வில் வேண்டுமெனும் நபர், சந்தேகமான காரியங்களில் கடவுளின் சித்தம் இன்னதென்பதை அறிந்து செயற்படுவார். ஆனால் சரியானது எது என்பதை நீர் அறி்ந்ததும் அதனைச் செய்ய விரும்பவில்லையானால், மிகுதி வழிகாட்டல்கள் பிரயோஜனமற்றதே.

2. இக்காரியமானது எல்லா வேதவார்த்தை

கூறுவதுடனும் ஒத்துப்போகிறதா?

"வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுய தோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது” என 2 பேதுரு 1:20 ல் வேதாகமம் கூறுகிறது. இது ஒருவர் தனிமையில் இருந்து சுயமாக வேதத்தை வாசித்துக் கற்றுக்கொள்ள முடியாது என்பது கருத்தல்ல. வேதாகமத்தின் ஒரு பகுதியானது புறக்கணிக்கப்பட்டும், அர்த்தம் கற்பிக்கப்படவும் கூடாது. அதே காரியத்தைக் குறித்து வேதாகமம் முழுமையும் என்ன கூறுகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.

உதாரணத்திற்கு, அங்கே ஒரு காரியத்தைக் கற்பிப்பது போலக் காணப்படலாம்; ஆனால் கவனமான வேப்படிப்பு தெளிவான, மற்றைய அநேக பகுதிகளையும் தெளிவில்லாத, முரண்பாடானவற்றையும் வெளிப்படுத்தும்.

இரட்சிக்கப்பட்ட பின்பும் ஒருவர் இழந்து போகப்படலாம் என கற்பிப்பது போல, ஒரு உதாரணம் எபிரெயர் 6:4-6 ல் காணப்படுகிறது. இப்பகுதி மட்டுமே எமக்கு இருக்குமானால் நித்திய பாதுகாப்பை நாம் விசுவாசிக்க மாட்டோம். ஆனால் நீங்கள் நித்திய பாதுகாப்பைக் குறித்து மற்றய பகுதிகள் என்ன கூறுகிறது என்று படிக்கும் போது விடயம் தெளிவாகிறது.

வசனத்தின் பின் வசனமாக விசுவாசிகளுக்கு, "நித்திய ஜீவன் உண்டு” என்று கூறுகிறது - யோவான் 3:16; 3:36 மற்றும் 3:14 போன்ற வசனங்கள். யோவான் 5:24 இலும் பார்க்க தெளிவாக வேறெதுவும் இருக்க மாட்டாது. "என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்”. இங்கே வேதாகமமானது விசுவாசிகளுக்கு நித்திய ஜீவன் உண்டென்று குறிப்பிடுவது மாத்திரமல்லாமல் அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படமாட்டான் என்று வாக்களிக்கிறது. அவன் மீண்டும் ஒருபோதும் பாவத்தின் தண்டனையின் கீழானவன் அல்ல.

பின்பற்றுவதற்கேற்ற ஒரு நல்ல ஒழுங்கானது: தெளிவான பல பகுதிகளை முரண்படுத்த ஒரு புரியாத பகுதியை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். எபிரெயர் 6:4-6 என்னத்தைக் கருதுவதாயிருப்பினும், விசுவாசிகளுக்கு நித்திய அல்லது சதாகால வாழ்வு உண்டெனும் தெளிவான பகுதிகளுக்கு முரண்பாடாக இல்லை.

ஒரு உண்மையான, நேர்மையான கிறிஸ்தவன் ஒரு காரியம் சரியா அல்லது பிழையா என்கிற தீர்மானத்திற்கு முகம் கொடுக்க நேரிடும்போது, இக்காரியமானது எல்லா வேதவார்த்தை கூறுவதுடனும் ஒத்துப் போகிறதா? எனக் கேட்க வேண்டும்.

3. இதைக் குறித்து ஜெபம் செய்துள்ளீரா?

"ஜெபித்த பின்பு அதிகமானவற்றை நீர் செய்யலாம், ஆனால் நீர் ஜெபிக்கும் வரை ஒன்றும் உம்மால் செய்ய முடியாது” என்று டாக்டர் ஏ.ஜே.கோர்டன் ஒருமுறை கூறினார்.

நாம் எல்லாவற்றிற்காகவும் ஜெபிக்க வேண்டும் என வேதாகமம் எடுத்துக் காட்டுகிறது. "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” என பிலிப்பியர் 4:6 கூறுகிறது. மீண்டும் வேதவசனம் வாக்களிப்பது என்னவெனில், "நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்” (மாற்கு 11:24). "எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ” எனும் சொற்றொடருக்குள் நிச்சயமாகவே, ஒரு சந்தேகமான விடயத்தில் கடவுளின் சித்தத்தை அறிய வேண்டும் என்ற விசுவாசிகளின் விருப்பமும் அடங்குகிறது.

எனக்கு வேதாகமத்திலுள்ள துக்கமான வசனங்களில் ஒன்று, யாக்கோபு 4:2 ஆகும். அதாவது, "நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை”. இது உங்களுக்குச் சித்திக்கிறதில்லை என்று கூறாமல் நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினால் உங்களுக்குச் சித்திக்கிறதில்லை எனக் கூறுகிறது. இது நிச்சயமாக, சந்தேகமான விடயத்தில் கர்த்தரின் வழிநடத்தலையும் உள்ளடக்கிறது. எமக்குத் தெளிவான வழிநடத்தல் இல்லையானால், வேதவாக்கு கூறுகிறது எம்மிடத்தில் இல்லை, ஏனெனில் நாம் கேட்கவில்லை.

சந்தேகமான ஒரு காரியத்தைக் குறித்து கர்த்தரின் சித்தத்திற்காக ஜெபிக்கும்போது, ஒருமுறை ஜெபித்த பின்பு தெளிவான வழிநடத்துதலைப் பெறாவிடில் ஜெபிப்பதைக் கைவிட வேண்டாம். கடவுள் அதனைத் தெளிவாக்கும் வரை தொடர்ந்து ஜெபிக்கவும். மத்தேயு 7:8 இலுள்ள, "கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்” என்ற வாக்குத்தத்தமானது தொடர்ந்து கேட்பதைக் கருதுகிறது. கடவுள் பதிலளிக்கிற போதும், காதால் கேட்கக் கூடிய சத்தமாக அவர் பதிலளிக்க மாட்டார்; பரிசுத்த ஆவியானவரினால் அவர் வழிநடத்துவார். இது என்னை அடுத்த கேள்விக்குக் கொண்டு வருகிறது.

4. உமக்குப் பரிசுத்த ஆவியானவரின்

வழிநடத்தல் உண்டா?

வேதாகமத்திலே காரியங்கள் தெளிவாக உச்சரிக்கப்படாத இடத்தில், நம்மை வழிநடத்தும்படி பரிசுத்தாவியானவரிடத்தில் நாம் எதிர்பார்க்கலாம். "மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.” என்று வேதாகமம் ரோமர் 8:14 கூறுகிறது. புதிய ஏற்பாட்டிலே, பரிசுத்தாவியானவர் கடவுளின் ஊழியர்களை எங்கே பிரசங்கிக்கவும், வேலை செய்யவும் வேண்டுமென வழிகாட்டியிருக்கிறார்.

அப்போஸ்தலர் 13:1,2 கூறுகிறதாவது:

"அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார்”

பரிசுத்த ஆவியானவர் மனிதர்களை ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிரசங்கிக்கவும் வேலைசெய்யவும் வேண்டுமென வழிநடத்திய தெளிவான நிகழ்வை இங்கே காணலாம்.

பரிசுத்த ஆவியானவர் மனிதர்களை ஆசியாவுக்குப் போகவேண்டாம் என வழிநடத்திய இன்னொரு நிகழ்வு உண்டு. வேதவாக்கு அப்போஸ்தலர் 16:6-8 இல் கூறுவதாவது:

"அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு, மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார். அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.”

இங்கே ஒரு தெளிவான பகுதி, மனிதர்களை பரிசுத்தாவியானவர், ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிரசங்கிக்காதபடி தடை செய்தமை.

கர்த்தரால் நியமிக்கப்பட்ட நல்ல மனிதர்களின் காலடிகளில் தடைகளும் நன்மைக்கே என ஒருவர் யோசனையாகக் கூறினார். இங்கே கவனம் செலுத்தும்படி நான் குறிப்பிட்ட இரண்டு வேதவாக்குகளும் நிச்சயமாகவே அந்த உண்மையை எடுத்துக் காட்டுகிறன.

பரிசுத்தாவியானவர் எம்மை ஜெபத்தில் வழிநடத்துகிறார். வேதாகமம் ரோமர் 8:26 இல் கூறுகிறது: "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.” என்னத்திற்காக ஜெபிப்பது, எப்படியாக ஜெபிப்பது என்று நாம் அறியாத நேரம் உண்டு என இங்கே வேதாகமம் கூறுகிறது.

அதிகமான இரட்சிக்கப்படாத மக்கள் சமூகமளித்திருந்த ஒரு கூட்டத்தில் அண்மையில் நான் பேசினேன். அதன் பின்பு கிறிஸ்துவை இரட்சகராக நம்ப விரும்புவோர் முன்பாக வந்து, கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தைப் பகிரங்கமாக அறிக்கை செய்யும்படி கேட்டேன். நாற்பது பேர் முன்வந்தனர்.

ஆராதனையின் பின்பதாக, ஒரு அன்பான மனிதன் என்னிடம் வந்து, "நான் என்னை எவ்வாறு கடவுளுக்கு விளங்கப்படுத்துவேன் என்று தெரியவில்லை, நான் பரலோகம் செல்ல வேண்டுமென அறிகிறேன். ஆனால் நான் அவரை நம்புகிறேன் என்பதை எப்படி அவரிடம் கூறுவதென்று எனக்குத் தெரியாது” என்று கூறினார். நான் அவரை சாதாரண ஜெபத்திற்கூடாக வழிநடத்தியதற்காக நன்றி கூறிய அவர், "இதைத்தான் நான் இவ்வளவு நேரமும் சொல்ல வேண்டுமென்றிருந்தேன், ஆனால் எப்படிக் கூறுவதென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை” என்றார்.

இரட்சிக்கப்பட்டு அதிக நாட்களான அநேக விசுவாசிகள், ஒரு காரியத்தைக் குறித்து பரிசுத்தாவியானவர் தெளிவான வழிநடத்தலைக் கொடுப்பதை அனுபவித்துள்ளனர். இப்படியான ஒரு அனுபவத்தினை எனக்கு ஞாபகமிருக்கிறது.

ஒரு இரவில் தெற்கு கரோலினா பட்டணத்திற்குகூடாக சென்று கொண்டிருக்கையில், நடந்து செல்லும் ஒருவரை நான் கடந்த போது, நான் அவரை எனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரை கிறிஸ்துவிடம் வழிநடத்த வேண்டுமெனும் இனந்தெரியாத ஓர் உணர்வு ஏற்பட்டது. ஆனால் நான் தனியாக காரில் இருந்துகொண்டு அறிமுகமில்லாத ஒருவரை ஏற்றிக்கொள்வது ஆபத்தாக அமையலாமென சிந்திக்கையில், நான் அவரைக் கடந்து விட்டேன். எப்படியாயினும், நான் அவரை எனது மனதை விட்டு எடுத்துப்போட முடியவில்லை. நான் திரும்பிப் போய் அவரை ஏற்றிக் கொண்டுவர வேண்டும் என ஏதோவொரு வகையில் பரிசுத்தாவியானவர் என்னை வழிநடத்தினார். நான் காதால் கேட்கக் கூடிய சத்தமாக எதையும் கேட்கவில்லை. நான் அவரை ஏற்றிக்கொள்ளாமல் விட்டது பிழையென நான் சாதாரணமாக உணர்ந்தேன். "அன்பான கர்த்தாவே, நான் ஏற்கனவே அந்த மனிதனைக் கடந்து விட்டேன், நான் திரும்பிச் செல்ல ஒரு வழியைக் கண்டு வெளியேற பல மைல்கள் தூரம் செல்ல வேண்டியிருக்குமே” என்று கூட நான் ஜெபித்தேன். ஆனாலும் உள்ளான உணர்வு என்னை விட்டு எடுபடவில்லை. இறுதியில் வெளியேறுவதற்கான ஒரு இடத்தைக் கண்டு வாகனத்தைத் திருப்பிக்கொண்டு திரும்பிப் போனேன். அந்த பாதசாரி அவ்விடத்திலேயே வந்து கொண்டிருந்தது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. நான் நிறுத்தி அவரிடம், நான் உங்களை வாகனத்தில் ஏற்றி உதவிசெய்யலாமா எனக் கேட்டேன். "நிச்சயமாக” எனப் பதிலளித்த அவர், எனது வாகனத்தினுள் ஏறிக்கொண்டார்.

நான் சில நிமிடங்கள் வாகனத்தைச் செலுத்த முன்பதாக, என்ன நடந்தது என்பதனை அவருக்கு விபரித்தேன். அவரை ஏற்றிக்கொள்வதற்கென இனந்தெரியாத வகையில் பரிசுத்த ஆவியினால் நான் எப்படி உணர்த்தப்பட்டேன் எனக் கூறினேன். நான் அவரைக் கடந்து சென்று மீண்டும் திரும்பி வந்து அவரை ஏற்றிக்கொண்டேன் என்றுகூடக் கூறினேன். சிறிது நேரத்தில் இரட்சிப்பின் திட்டத்தினை விளங்கப்படுத்தினேன்; அந்த மனிதன் கிறிஸ்துவை தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டார். நாம் ஒரு அற்புதமான ஐக்கிய நேரமுள்ளவர்களானோம்; நான் ஒரு வேதாகமத்தை - விசுவாசிக்கிற சபையைக் கண்டுபிடித்து, அதில் இணைந்து கிறிஸ்தவ வாழ்வு வாழ்வேன் என்று அவர் எனக்கு வாக்களித்தார்.

இப்போது நான் பரிசுத்தாவியின் வழிநடத்தலைக் குறித்துப் பேசுகையில், காதால் கேட்கும் சத்தத்தையோ அல்லது தரிசனம் காண்பதையோ குறித்துப் பேசவில்லை. எமது விருப்பங்களுக்கூடாக பரிசுத்தாவியானவர் வழிநடத்துகிறார். பிலிப்பியர் 2:13 கூறுகிறது, "தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.” கடவுள்தான் எமக்குள் விருப்பங்களை உருவாக்கி, பின்பு விருப்பத்தை நடைமுறைப்படுத்த வல்லமையைக் கொடுக்கிறார். வேதாகமக் கொள்கைகளுக்கு முரணாக, பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் எங்களை வழிநடத்தமாட்டார். "வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருந்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்று வேதாகமம் கூறுகிறது. வேதவாக்குகளெல்லாம் பரிசுத்க ஆவியினாலே அருளப்பட்டிருக்கையில் பரிசுத்த ஆவியானவர் ஒருவனை வேதாகமத்திற்கு முரணாக வழிநடத்தி தனக்குத்தானே முரண்பட்டுக்கொள்ளமாட்டார்.

எமக்கு சந்தேகமான எந்தக் காரியத்திலும் பரிசுத்தாவியானவரை வழிநடத்தும்படி கேட்டு அவரின் தாழ்மையான வழிநடத்தலை எதிர்பார்க்க எமக்கு உரிமையுண்டு.

5. இது கடவுளைப் பிரியப்படுத்துகிறதா?

"அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்” என 1யோவான் 3:22 இல் வேதாகமம் கூறுகிறது. அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வது ஒருவருக்குச் சாத்தியமானது, ஆனால் சந்தேகமான விடயத்தில் தெளிவான கற்பனையில்லாவிடின் என்னவாகும்? சில விடயங்கள் தெளிவாக கட்டளையிடப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, "கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக” என இப்படியாக வேதாகமம் கட்டளையிடுகிறது. இருந்த போதிலும், "ரொக் மியூசிக் கேளாதிருப்பாயாக”, அல்லது "ஆடாதிருப்பாயாக” என்று கட்டளையில்லை. ஆகவே விசுவாசி என்ன செய்யலாம்? கீழ்ப்படிவதற்கு கட்டளையில்லாதபோது, "இது கடவுளைப் பிரியப்படுத்துகிறதா?” எனக் கேள்வி அமைய வேண்டும். "அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால்”, என்று வேதாகமம் கூறுகிறது. சந்தேகமான விடயத்தைக் குறித்து தெளிவான கட்டளை இல்லாத போதிலும், இது கடவுளைப் பிரியப்படுத்துகிறதா? "நான் செய்கிற இந்தக் காரியம் கடவுளைப் பிரியப்படுத்துகிறது” என்று உண்மையாகவும் நேர்மையாகவும் உம்மால் கூற முடியுமா? "எனது உடையலங்காரம் கடவுளைப் பிரியப்படுத்துகிறது” என்று கூறலாமா? ஆம் என கிறிஸ்தவனால் நேர்மையாகக் கூறமுடியாவிட்டால், அவன் அதைச் செய்யக்கூடாது. "அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமல் போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகின்றோம்” என 2 கொரிந்தியர் 5:9 இல் வேதாகமம் கூறுகிறது. "அவரை மிகவும் பிரியப்படுத்துகிறதாய்” இருக்க வேண்டும். இது கர்த்தரைப் பிரியப்படுத்தும் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளாதவரை, கிறிஸ்தவன் எதையும் செய்யக்கூடாது.

6. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால்

உம்மால் இதைச் செய்ய முடியுமா?

"வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” என்று கொலோசெயர் 3:17 கூறுகிறது. "வார்த்தையினாலாவது, கிரியையினாலாவது” எனும் சொற்களைக் கவனமாக கவனியுங்கள். விசுவாசி எப்போதாவது கூறுபவற்றையும் செய்வதையும் இது உள்ளடக்குகிறது. இந்த வசனத்தின்படி நாம் எதனைச் செய்தாலும் அதை, "கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் செய்ய” வேண்டும்.

ஆடுகிற விடயத்தை எடுத்துக்கொள்வோம். ஆடுவதில் எந்தவொரு பிழையுமில்லை என அநேகமாக சில கிறிஸ்தவர்கள் உணர்வதுண்டு. ஆனால் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நேர்மையாக நீர் ஆடுவீரா?

கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் புகைப்பிடிப்பீரா?

கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் சபிப்பீரா? மதியை மயக்கக் கூடிய இசையுடனான பாடல்களைக் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் உம்மால் கேட்க முடியுமா?

விசுவாசி பிரச்சினை ஒன்றிற்கு முகங்கொடுத்து, அது சரியா அல்லது பிழையா என்று தீர்மானம் எடுக்க முடியாமற் போகும்போது, "நான் இதனைக் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் செய்ய முடியுமா?" என்று சாதாரணமாகக் கேட்க வேண்டும். முடியாது என்றால், அது பிழையானது.

7. அதற்காக கடவுளுக்கு நன்றிகூற

உம்மால் முடியுமா?

மீண்டும், கொலோசெயர் 3:17 கூறுவது, "வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்”.

சந்தேகமான எந்தக் காரியமாயினும் சரி, நேர்மையான முறையில் உம்மால் கடவுளுக்கு நன்றி கூறமுடியுமா?

பீற்றர் கார்ற்ரைற், சென்ற வருடத்தின் பழைய முகாம் - கூட்டப் பிரசங்கியார், கம்பேர்லான்ட் மலைகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் போது, ஆடல்கள் நடைபெறும் ஒரு வீட்டில் இரவு முழுவதும் நிற்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். அதிகமான ஜனங்கள் ஒருபோதுமே பிரசங்கமொன்றினைக் கேட்டதில்லை. கார்ற்ரைற் ஒரு மூலையில் இருந்து ஆடலைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நின்று, அந்த மக்களுக்கு பிரசங்கிப்பதாக தனது மனதை நிலைப்படுத்தினார். "நான் இக்காரியத்தில் கடினமாக என் மனதை நிலைப்படுத்தினேன்” எனக் கூறும் அவர், "ஒரு அழகிய இளம் பெண் மிகவும் கருணையாக என்னிடம் நடந்து வந்து, ஒரு அழகான வந்தனம் போட்டு, மனோகரமான வெல்லும் புன்னகையுடன், தன்னுடன் ஆடுவதற்கு வெளியே வரும்படி என்னை அழைத்தார்.

"அத்தருணத்தில் எனது சிந்தனையையும் அல்லது உணர்வையும் கடினமாக என்னால் விபரிக்க முடியும். எப்படியோ, ஒரு கணப்பொழுதி்ல் துணிகரமான பரிசோதனையொன்றின் மேல் மனோதிடம் கொண்டேன். என்னால் முடிந்தவரை கருணையோடே எழுந்தேன்; ஒரு உணர்வுடன் எழுந்தேன் என நான் கூறமாட்டேன், ஆனால் அதிக உணர்வுகளுடன் எழுந்தேன்! அந்த இளம்பெண் எனது வலது பக்கத்திற்கானாள்; அவள் தனது இடது கரத்தை என்மீது ஊன்றுகையில் நான் எனது வலது கரத்தினால் அவளது வலது கரத்தைப் பற்றினேன். இவ்வாறே நாம் தளத்தில் நடந்தோம். ஒரு அந்நியனுக்கு காட்டப்பட்ட அந்தப் பெண்ணின் இந்த மரியாதையான நடவடிக்கையின் மீது, முழுக் கூட்டமும் பிரியமுடையதாகக் காணப்பட்டது.

"கறுப்பு மனிதனே இசையமைப்பவராக இருந்தார். அவர் தனது இசையைத் திறமான முறையில் ஒழுங்காக அமைக்க ஆரம்பித்தார். அப்பொழுது இசையமைப்பவரிடம் சற்றுப் பொறுத்துக்கொள்ளும்படி கேட்டேன். அநேக வருடங்களாக எந்தவொரு முக்கியமான காரியத்தையும் செய்ய முன்பு, முதலாவதாக தேவனின் ஆசீர்வாதத்தை அதன் மீது கேட்காமல் நான் செயற்படுத்தியதில்லை. ஒரு முற்றிலும் அந்நியனுக்கு இவ்வாறான ஒரு மரியாதையான நடவடிக்கையை மேற்கொண்ட இந்த அழகிய இளம் பெண்ணின்மீதும், இம் முழுக் கூட்டத்தின் மீதும் தேவனின் ஆசீர்வாதத்தை இப்போது கேட்க விரும்பினேன்.

நான் அந்த இளம் பெண்ணின் கரத்தை இறுகப்பிடித்துக் கொண்டு, "நாமெல்லாரும் முழந்தாற்படியிட்டு ஜெபிப்போம்” என்றேன். உடனடியாகவே எனது முழங்கால்களை மடக்கி என்னால் முடிந்தவரை ஆத்துமாவினதும் சரீரத்தினதும் முழு பலத்துடன் ஜெபிக்க ஆரம்பித்தேன். அந்த இளம் பெண் என்னிடமிருந்து விடுபட முயன்றாள். ஆனால் நான் அவளை இறுகப் பிடித்தேன். தற்பொழுது அவள் தனது முழந்தாளில் வீழ்ந்தாள். கூட்டத்தில் சிலர் முழந்தாற்படியிட்டனர். சிலர் நின்றுகொண்டிருந்தனர், சிலர் விலத்திச் சென்றனர், சிலர் இன்னமும் இருந்துகொண்டிருந்தனர். ஆனால் எல்லாரும் புதுமையாகப் பார்த்தனர். இசையமைப்பவர் சமையல் அறைக்குள் ஓடிச்சென்று, "கர்த்தாவே கிருபையாயிரும், என்ன காரியம்? என்ன கருத்து?” என்று கூறிக்கொண்டான்.

நான் ஜெபிக்கும்போது சிலர், சத்தமாக விம்மி விம்மி அழுதனர். சிலர் கிருபைக்காக அழுதனர். நான் எனது முழந்தாலில் இருந்து எழுந்து ஒரு பாடலைப் பாடிய பின், ஒரு அறிவுரையைக் கொடுத்தேன். எனக்கு அழைப்புவிடுத்த இளம் பெண் சாஷ்டாங்கமாய் நிலத்தில் விழுந்து கிடந்து, கடவுளின் கிருபைக்காக அழுதாள். நான் மீண்டும் அறிவுரை வழங்கினேன். நான் கிட்டத்தட்ட இரவு முழுவதும் பாடி, ஜெபம் பண்ணினேன்.

அக் கூட்டத்தில் பதினைந்து பேரளவில் சமயத்தை அறிக்கையிட்டனர். எமது கூட்டம் அடுத்த நாளும் அடுத்த இரவும் நீடித்தது. அநேகமானோர் வல்லமையாக மாறுதலடைந்தனர். நான் ஒரு சங்கத்தை ஏற்பாடு செய்தேன், முப்பத்திரண்டு பேரை சபைக்குக் கொண்டு சென்றேன். அவர்களுக்கு ஒரு பிரசங்கியாரை அனுப்பினேன். எனது காணிக்காரர் தலைவனாக நியமிக்கப்பட்டார். அநேக வருடங்கள் அவர் இப்பதவியில் இருந்தார். அந்த நாட்டின் பெரும்பகுதிக்கு ஒரு பெரிய மகிமையான உயிர்மீட்சிக்கு ஆரம்பமாக இருந்தது. இந்த மெதடிஸ்ற் பிரசங்கியாரின் ஆட்டத்தில் அநேக வாலிபர்கள் மாறுதலடைந்து, இயேசு கிறிஸ்துவின் பிரயோஜனமான ஊழியர்களானார்கள்.

இங்கே ஒரு பிரசங்கியார் ஒரு சந்தேகமான காரியத்தைக் குறித்து ஜெபித்தார், அதன் பெறுபேறாக ஒரு உயிர்மீட்சிக் கூட்டமும் ஒரு சபையும் ஸ்தாபிக்கப்பட்டது.

சினிமாவுக்குப் போவதைக் குறித்து எடுத்துக்கொள்ளுங்கள். "சினிமாவுக்கு சமூகமளிக்காதிருப்பாயாக” என வேதாகமம் கூறவில்லை. ஆனால் சினிமாக்களுக்காக நான் தேவனுக்கு நன்றி கூறமுடியுமா? என்னால் முடியாவிட்டால் நான் அதற்குச் சமூகமளிக்கக் கூடாது. "வார்த்தைகளினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்”. சந்தேகமான காரியங்களில் நேர்மையான ரீதியில் உங்களால் தேவனுக்கு நன்றிகூற முடியாவிட்டால், நீங்கள் அதனைச் செய்யாதிருப்பது நன்று.

8. இது தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருமா?

வேதவாக்கானது 1கொரிந்தியர்10:31 இல், "ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” என அறிவுரை கூறுகிறது. நாம் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்காகச் செய்ய வேண்டும். அது கிறிஸ்தவர்கள் செய்ய விரும்பும் எதையும் அல்லது எப்போதும் செய்யத்தூண்டப்படும் யாவற்றையும் உள்ளடக்குகின்றது. "நான் இதனை தேவனின் மகிமைக்காகச் செய்ய முடியுமா? என்பதே கேட்கப்படவேண்டியது.

"நீங்கள் புசித்தாலும் அல்லது குடித்தாலும் அல்லது எதையாகிலும் செய்தாலும், அவற்றையெல்லாம் தேவனைக் கனப்படுத்தும்படி செய்யுங்கள்” என இன்னொரு மொழிபெயர்ப்பில் வாசிக்கப்படுகின்றது.

உங்களுக்கு சந்தேகமான காரியம் கடவுளுக்கு கனத்தைக் கொண்டுவருமா? அது தேவனை மகிமைப்படுத்துமா? அது தேவனுக்கு ஒரு நல்ல பெயரைக் கொடுக்குமா? அப்படியிராவிட்டால், அது தவறானது. நாம் புசித்தாலும் குடித்தாலும் அல்லது எதைச் செய்தாலும், நாம் அவற்றையெல்லாம் தேவனின் மகிமைக்காகவும், தேவனின் கனத்திற்காகவும், தேவனுக்கு நற்பெயரைக் கொடுக்கவும் செய்ய வேவண்டியவர்கள்.

சங்கீதம் 23:3 கூறுவதாவது, "தம்முடைய நாமத்தின் நிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகின்றார்" நாம் கிறிஸ்தவர்கள், நாம் அவரின் பெயரைத் தரித்துக்கொண்டவர்கள். எமது வாழ்க்கை முறை, பாஷை, மனோபாவம், மற்றும் உடுத்தும் விதம் யாவும் அவரின் நாமத்தைப் பிரதிபலிக்க வேண்டும். தம்முடைய நாமத்தின் நிமித்தம் எம்மை நீதியின் பாதைகளில் நடத்துகின்றார். சந்தேகமான காரியங்கள் தேவனுக்கு மகிமையைக் கொண்டு வருமென நீர் நேர்மையாக முற்றிலும் நம்பினாலொழிய, மற்றும்படி செய்ய வேண்டாம்.

9. இது மற்றைய கிறிஸ்தவர்களைத்

துக்கமடையச் செய்யுமா?

1கொரிந்தியர் 8:13இல், "ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்” என பவுல் கூறுகின்றார். 1கொரிந்தியர் 8வது அதிகாரத்தில் போஜனத்தையும் கிறிஸ்தவ சுதந்திரத்தையும் தொடர்புடையதாக வேதவாக்கு இருக்கிறது. 1தீமோத்தேயு 4:2-5 இன்படி, போஜனம் பண்ணுவது குறித்து எதுவும் வேதாகமத்திற்கு விரோதமாக இல்லை.

"விவாகம்பண்ணாதிருக்கவும், விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள். தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.”

போஜனம் பண்ணுவதில் எந்தவிதமான தவறும் இல்லையென்று அப்போஸ்தலனாகிய பவுல் அறிந்திருந்தார்; எப்படியாயினும் மற்றொரு சகோதரன் புண்படும் வகையில் தனது கிறிஸ்தவ சுதந்திரத்தைப் பயன்படுத்தவில்லை. அவர் ஒரு பலவீனமான சகோதரனை 1கொரிந்தியர் 8:11 இலும், மீண்டும் ரோமர் 14:2 இலும் குறிப்பிடுகையில் அவர் கூறுவதாவது, "ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கின்றான்."

மாம்சம் புசிப்பது பிழை என்று சில பலவீனமான கிறிஸ்தவர்கள் நினைக்கின்றனர் என்பது இப்பகுதிக் கூடாகத் தெளிவாகின்றது. அப்படியிருந்தும் பவுல் கற்பிக்கையில், "தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல” என அவர் கூறி, "ஆகையால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்” என்றார். "இடறலுண்டாக்கு” என மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கச் சொல்லின் அர்த்தம், "தடுக்கிவிழு” என்பதாகும். "ஆகையால் போஜனம் என் சகோதரன் தடுக்கிவிழ காரணமாக இருக்குமாயின், என் சகோதரன் தடுக்கிவிழ ஏதுவாயிராதபடிக்கு, நான் இனி ஒருபோதும் மாம்சம் புசிக்கமாட்டேன்” என இன்னுமொரு மொழிபெயர்ப்பில் காணப்படுகின்றது.

இது மற்றைய கிறிஸ்தவர்களை இடறலடையச் செய்யுமா? என நான் இப்போது கேட்கும்போது, ஒரு தனிப்பட்ட கிறிஸ்தவன் உலகின் எங்காவது ஓரிடத்தில் சந்தேகமான காரியத்தினால் பாதிக்கப்பட்டதை உம்மால் காணக்கூடுமானால், நீர் அதனைச் செய்யக்கூடாது என நான் கருதவில்லை. நீர் செய்யும் ஏதாவது காரியங்களினால் சில கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படுவதை நீர் நிச்சயமாகக் காணுவீர். ஆனால் அது அதிகமான நல்ல கெளரவத்திற்குரிய கிறிஸ்தவர்களுக்கு இடறலாயிருக்குமாயின், அது சரியென எனக்குத் தோன்றுமாயினும் நான் அதனைச் செய்யமாட்டேன்.

நான் ஒருபோதுமே செய்திராத காரியங்கள் உண்டு; அவைகள் பிழையானவைகள் என நான் நினைப்பதனால் அல்ல (உண்மையாகவே, எந்தவித பிழையையும் நான் காணவில்லை). ஆனால் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதனால் நான் அவற்றைச் செய்யாது விலத்திவிடுகின்றேன்; மற்றைய விசுவாசிகள் இடறிப்போவதற்கு நான் எனது சமயச் சுதந்திரத்தைப் பயன்படுத்த மாட்டேன்.

சென்ற வருடத்தில் ஒரு பெரிய பிரசங்கியாரிடம் ஒரு பெண் அணுகி, அவரது கழுத்தணி (TIE)யினால் தான் இடறலடைந்திருப்பதாகக் கூறினாள். அது ஒரு நூல் போன்ற கழுத்தணி. அது அந்தப் பெண்ணுக்கு நல்லதாகத் தெரியவில்லை. அவர் பணிவுடன் அவளிடம் ஒரு கத்தரிக்கோலைக் கொடுத்து, அதனைக் கத்தரித்துவிடும்படி கூறினாள். அவள் உடனடியாகவே அதனைச் செய்தாள். அவள் கத்தரிக்கோலை திருப்பி அவரிடம் கையளித்தபோது, "நான் உங்களது நாவினால் இடறலடைந்து இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

ஒரு கிறிஸ்தவ சகோதரனுக்கு இடறலாய் இருப்பது, ஆபத்தான காரியம். "இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்” (லூக்கா 17:2) என்றார் இயேசு.

உத்தியோகத்துடன் பொறுப்பு வருகிறது. எனது உத்தியோகத்தின் காரணமாக நான் செய்ய முடியாத குறிப்பிட்ட காரியங்கள் உண்டு. மற்றவர்கள் அதைச் செய்யலாம், யாரும் அதைக் குறித்து எதுவும் கருதமாட்டார்கள். உறவுகள் கூட பொறுப்பைக் கொண்டு வருகின்றது. என்னுடனான அவர்களின் உறவின் காரணத்தால் மற்றைய பிள்ளைகளுக்கு இல்லாத ஒரு குறிப்பிட்ட பொறுப்புகள் எனது பிள்ளைகளுக்கு உண்டு. மற்றப் பிள்ளைகளிடத்தி்ல் இல்லாதவாறு இவர்கள் ஒருவருக்கொருவரிடையே பொறுப்புக்களும் உண்டு.

தேவனின் பிள்ளைகளாக, மறுபடியும் பிறந்த ஒவ்வொரு விசுவாசியையிட்டும் எமக்கு ஒரு பொறுப்பு உண்டு. எம்மால் எல்லாவிதத்திலும் சாத்தியமான வகையில் கிறிஸ்தவ ஜீவியத்திற்கு உதவிசெய்ய வேண்டும். அவனுக்கு இடறல் உண்டாக்கும் எதையும் ஒருபோதும் செய்யாதபடிக்கு கவனமாக இருக்க வேண்டும்.

சந்தேகமான காரியம் மற்றைய கிறிஸ்தவர்களை இடறச் செய்யுமானால் அது பிழையானதாகும்.

10. இது சரியானதென்று நான்

முழுமையாக நம்புகிறேனா?

ரோமர் 14:5 இல் வேதாகமம் கூறுவதாவது, "அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்”. இவ் வசனத்தில் "நிச்சயத்தை” எனும் சொல் சாதாரணமாக "நம்பச் செய்” எனக் கருதுகின்றது. இன்னொரு வகையில் கூறுவதாயின், ஒரு காரியமானது சரியென முழுமையாக நம்பாவிட்டால், அதனைச் செய்யாமல் விடுவதே சிறந்தது.

ஞாயிறு பாடசாலைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஒரு மனிதனின் கதையொன்றை கலாநிதி பொப் ஜோன் சீனியர் அவர்கள் கூறினார். அவர் முன்பு அணியப்பட்ட மேற்சட்டை ஒன்றை எடுத்து, பக்கத்து அறையில் இருந்த தனது மனைவிக்குக் கேட்கும் வகையில் தனது சத்தத்தை உயர்த்தி, "தேனே, இந்த மேற்சட்டை அழுக்கானதா?” எனக் கேட்டார். "அது சந்தேகமாக இருக்குமானால் அது அழுக்கானது தான்” என தாழ்மையாகப் பதிலளித்தாள்.

"விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே” என ரோமர் 14:23 எச்சரிக்கிறது.

ஒரே சபையில் இருபத்தொரு வருடங்களாக, நான் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். வருடங்களுக்கூடாக மக்கள் என்னிடம், "போதகரே, இதனை நான் செய்வது சரியா? இது சரியா அல்லது பிழையா என வேதாகமம் தெளிவாகக் கூறவில்லை, உண்மையில் எனக்கும் தெரியவி்ல்லை” எனக் கேட்டுள்ளனர்.

"இதைக் குறித்து உமக்கு சந்தேகம் உண்டா?” என நான் அதிக சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளேன். அவர்களின் பதில், "ஆம்” என்றிருக்குமாயின், நான் அவர்களுக்கு ரோர் 14:5 ஐயும் ரோமர் 14:23 ஐயும் காண்பித்து, சந்தேகத்தின் பலனை தேவனுக்குக் கொடுப்பது நல்லதென்று விளக்கமளித்தேன். எதையும் சரியென முற்றிலுமாக நம்பும்வரை ஒருபோதும் செய்ய வேண்டாமென நான் எப்பொழுதும் மக்களுக்கு ஆலோசனை கொடுப்பேன்.

இதனுடன் தொடர்புடையதாக கொலோசெயர் 3:15 மிகவும் உதவியான வசனமாக உள்ளது; "தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது”. இங்கே "ஆளக்கடவது” என மொழிபெயர்க்கப்பட்ட சொல்லானது, "ஆட்சிசெய்ய”, "வியாபித்திருக்க” எனப் பொருள்படும். இன்னொரு விதத்தில், தேவசமாதானம் ஆட்சிசெய்யட்டும், அது தீர்மானிக்கட்டும். ஒரு காரியத்தையிட்டு உங்களுக்கு சமாதானமில்லையாயின், அதனைச் செய்ய வேண்டாம்.

நான் எப்பொழுதும் மோசமான தீர்மானங்களை அவைகளைக் குறித்த சமாதானம் எனக்கு இல்லாத போதே ஏற்படுத்தியுள்ளேன். நான் ஒரு வாகனத்தை வாங்கியது எனக்கு நன்கு ஞாபகம் இருக்கின்றது. அது மிகவும் அழகாக இருந்தது. உண்மையில் அது எனக்குத் தேவைப்பட்டது. எப்படியாயினும், வியாபார ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நேரம் வந்தபோது, நான் மிகவும் கடினமாக உணர்ந்தேன். எனக்கு சமாதானம் இருக்கவில்லை. இந்த கடினமான உணர்வை நான் உதாசீனம் செய்துவிட்டு வாகனத்தை வாங்கிக் கொண்டேன்.

ஆ, அது ஒரு பயங்கரமான தவறு! மூன்று மாதங்களுக்குள், நான் அதை வாங்குவதற்குச் செலுத்திய பணத்திலும் அதிகமான பணத்தைச் செலவிடவேண்டி வந்தது. "இந்த காரை நான் ஒருபோதும் கண்டிராதிருந்திருந்தேனானால் நலமாயிருந்திருக்கும்!” என அடிக்கடி எனது மனைவிக்குக் கூறினேன். கொலோசெயர் 3:15 இலுள்ள வேதாகமக் கொள்கையைப் பின்பற்றியிருப்பேனானால், அதிகமான சந்தோஷமின்மையைத் தவிர்த்திருக்க முடிந்திருக்கும்.

ஒரு சந்தேகமான காரியத்தையிட்டு ஒரு தீர்மானமெடுக்க விசுவாசி முகங்கொடுக்கும்போது, அந்தக் காரியத்தையிட்டு பரிபூரணமான சமாதானம் அவருக்கு இல்லாவிடின், அவர் அதனை ஒருபோதுமே செய்யக் கூடாது. அதில் எந்தவிதமான தவறும் இல்லையேயானால் தேவனே பரிபூரணமான சமாதானத்தைக் கொடுப்பார். கொலேசெயர் 3:15 இலுள்ள வேதாகமக் கொள்கையினை நீர் அவமதிக்கின்றதான ஒவ்வொரு தடவையும், நீர் வருத்தப்பட வேண்டிவரும் என நிச்சயப்படுத்தலாம். தீர்மானிக்க வேண்டிய சந்தேகமான காரியத்தின்போது, ஒரு கிறிஸ்தவனுக்கு பரிபூரண சமாதானம் இருக்க வேண்டும். பூரணமான நிச்சயம் அல்லது நம்பிக்கையானது அது சரியென்பதில் இருக்க வேண்டும்.

இறுதியாக,

11. எனக்குத் தெரிந்த நல்ல கிறிஸ்தவர்கள்

இது சரியென ஒத்துக் கொள்கின்றனரா?

ஆசீர்வாதமான ஆலோசனைகளை நீதிமொழிகள் 24:6 காணலாம். "ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.” ஒரு விடயத்தைக் குறித்து தீர்மானிப்பதில் கடினமான நேரங்கள் என் வாழ்க்கையில் கூட இருந்தது. மேலேயுள்ள வழிகாட்டல்கள் யாவையும் பயன்படுத்திய பின்பும், நான் திருப்தியடையவி்ல்லை. பக்தியுள்ள நல்ல கிறிஸ்தவர்களின் ஆலோசனையைத் தேடுவதே எனது இறுதி மேற்கோளாக இருந்தது.

நான் வழமையாக ஒரு நல்ல கிறிஸ்தவரிடம் தனிமையாகச் சென்று, "நான் இதனைச் செய்வதையிட்டு நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” எனக் கேட்பேன். பின்பு அவரின் நேர்மையான கருத்து எனக்கு வேண்டும் என்பதை அவருக்கு நிச்சயப்படுத்துவேன். நான் அதிகமானவற்றை எனது ஆலோசகர்களுக்கூடாகக் கற்றுள்ளேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, எட்டு வித்தியாசமான கிறிஸ்தவர்களை நான் அணுகி, எனக்கு சந்தேகமான காரியத்தைக் குறித்து அவர்களின் ஆலோசனையைக் கேட்டேன். ஒருவருக்காகிலும் மற்றொருவரோடு பேசினேன் எனத் தெரியாமல், இவ்வாறு எட்டு தனிப்பட்டவர்களின் நேர்மையான உணர்வினைப் பெற்றுக் கொண்டேன்.

அநேக நல்ல பக்தியான கிறிஸ்தவர்களின் கருத்தினை எடுக்காமல் ஒரு முக்கியமான தீர்மானமும் ஒருபோதும் செய்வதில்லை என்பதை பல வருடங்களாகப் பழக்கப்படுத்தி வருகின்றேன். "ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்” என்பதற்கு என்னால் சாட்சி பகர முடியும். நல்ல ஞானமுள்ள கிறிஸ்தவர்களின் ஆலோசனையை நான் நாடியதன் காரணத்தால், தேவன் என்னைக் கடந்த காலங்களில் பாதுகாத்தார் என நான் உணருகிறேன்.

நீங்கள் ஒரு சந்தேகமான காரியத்திற்கு தீர்மானமெடு்க்க முகங்கொடுக்கும்போது, அநேக நல்ல கிறிஸ்தவர்களை அணுகி அவர்களின் அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களின் ஆலோசனைகள் பெறுமதி வாய்ந்தவையும், சரியான தீர்மானத்தை எடுக்க உதவி செய்பவையுமாகும்.